சென்னை : தமிழ்நாடு சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒட்டல் பிரிவு மற்றும் இதர பிரிவுகள், அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலாத்துறை வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கடந்த 18 மாதங்களாக கோவிட்- 19 நோய்த்தொற்றின் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலாவை வாழ்வாதாரமாக கொண்டு தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் தங்களது வருவாய் பெருமளவு இழந்துள்ளனர்.
ஆலோசனை
இந்நிலையில், வரும் காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்களின் வருவாய்யை அதிகரிப்பதற்கும் ( Post Tourism Covid recovery plan ) தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையை பெற்று, வல்லுநர் குழு அமைப்பதற்கு இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
மேலும் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு, வருவாய் அந்நியச் செலவாணி ஈட்டுதல், மண்டல வாரியான வளர்ச்சி ஆகிய பொருளாதார மேம்பாட்டிற்கு சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றி வருகின்றது. இந்தியாவில் சுற்றுலாத்துறையில் தமிழ்நாடு முன்னனி மாநிலமாக தொடர்ந்து நீடித்து வருகின்றது.
திருவள்ளூர் சிலைக்கு ஒளிரும் விளக்கு வசதி
தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஐயன் திருவள்ளுவர் சிலை தமிழர்களின் பாரம்பரிய முக்கிய அடையாளமாக திகழ்ந்து வருகின்றது. அங்கு வருகை புரியும் , உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் முயற்சியாக தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனை பெற்று அய்யன் திருவள்ளுவர் சிலையின் அழகினை இரவிலும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் சீரொலி சீர்மிகு காட்சி ( Land mark lighting and projection show ) அமைக்க சுற்றுலாத்துறை அமைச்சர் திட்ட அறிக்கை தயார் செய்ய அறிவுறுத்தினார்.
சோழர்களின் முக்கிய துறைமுக நகரமான பூம்புகாரில் அமைந்துள்ள சுற்றுலா வளாகத்தினை உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் வருகையினை அதிகரிக்கும் வகையில் பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் அமைந்துள்ள கலைக்கூடம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக திட்ட அறிக்கை தயார் செய்ய அறிவுறுத்தினார்.
திட்ட அறிக்கை
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அணுகு சாலைகள், உடை மாற்றும் அறைகள், வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர், வழிகாட்டும் பலகைகள், மின் விளக்கு போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு பணிகள் குறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஒன்றிய அரசு சுற்றுலா அமைச்சகம் மாமல்லபுரத்தை சுற்றுலாத் தலமாக (Iconic Site) தேர்வு செய்துள்ளது. இத்தலத்தில் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சுமார் ரூ .441 கோடி மதிப்பீட்டில் முதற்கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இராமேஸ்வரம் மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளை சுற்றுலா கண்ணோட்டத்தில் மேம்படுத்த சுமார் ரூ .40.00 கோடி மதிப்பீட்டில் முதற்கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.