காபூல்:ஆப்கன் நாட்டை தாலிபன்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து தூதர்கள், உயர் அலுவலர்கள் உள்பட 120 இந்தியர்களுடன் ராணுவ விமானம் சி-17 இந்தியா நோக்கிப் புறப்பட்டதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
இது குறித்து அரிந்தம் பாக்சி கூறுகையில், "தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் உள்ள இந்தியர்கள் காபூல் விமான நிலையத்திலும், பாதுகாப்பான இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் காபூலில் இருந்த இந்திய தூதரகம் கலைக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக, முக்கிய ஆவணங்களுடன் இந்திய தூதர்கள், உயர் அலுவலர்கள் உள்பட 120 பேர் இந்திய விமானப்படை விமானம் சி-17 மூலம் தாயகம் அழைத்துவர திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 17) 120 பேருடன் இந்திய விமானம், காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த விமானம் டெல்லியில் தரையிறக்கப்படுகிறது.
ஆன்லைன் விசா
ஆப்கனில் உள்ள இந்தியர்கள், தங்களைச் சொந்த நாட்டிற்கு அனுப்புமாறு கோரிக்கைவைத்துள்ளனர். அவர்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறோம். இந்தியர்களை உடனடியாக மீட்க, உள் துறை அமைச்சகம் விசா விதிகளை மறு ஆய்வு செய்துள்ளது.