திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஆர்ப்பூக்கரை மற்றும் தாழையாழம் ஊராட்சிகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பி.கே.ஜெயஸ்ரீ பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1 கி.மீ. சுற்றளவில் உள்ள பறவைகளை அழிக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி கால்நடை பராமரிப்பு துறை மேற்பார்வையில் ஊழியர்கள் பறவைகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனடிப்படையில் வாத்துகள், கோழிகள், வளர்ப்பு பறவைகள் உள்பட 8,000 பறவைகள் கொல்லப்படும்.
அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 10 கி.மீ. சுற்றளவில் கோழி, வாத்து, வளர்ப்புப் பறவைகள், முட்டை, இறைச்சி விற்பனைக்கும், கைமாற்றுதலுக்கும் டிசம்பர் 13ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு கோட்டயத்தின் 9 உள்ளாட்சி அமைப்புகளில் கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகள் உயிரிழந்தால் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.