மும்பை:மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்ரே நேற்று (ஜூன் 24) இரவு காணொலி காட்சி மூலமாக சிவசேனா தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது, "சிவசேனா தொண்டர்கள்தான் எனது சொத்து, அவர்கள் என்னுடன் இருக்கும்வரை எந்த விமர்சனத்தையும் கண்டுகொள்ள மாட்டேன். கூடவே இருந்தவர்கள் சிவசேனாவிற்கு துரோகமிழைத்துவிட்டார்கள்.
உங்களில் (தொண்டர்கள்) பலர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் இருந்தும் நாம் அவர்களுக்கு (அதிருப்தி எம்எல்ஏக்கள்) வாய்ப்பளித்தோம். உங்களின் கடின உழைப்பால் வெற்றிபெற்ற பிறகு இவர்கள் தற்போது அதிருப்தியாளர்களாக மாறியுள்ளனர். மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் நீங்கள் கட்சிக்கு ஆதரவாக நிற்கிறீர்கள். எப்படி உங்களுக்கு நன்றி சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.
பாஜக கூட்டணிக்கு அழுத்தம்:கூட்டணி கட்சிகள் மீதான புகார்கள் குறித்து ஆலோசிப்போம் என ஏக்நாத் ஷிண்டேவிடம் நான் கூறினேன். அதற்கு, பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனக்கு அழுத்தம் கொடுப்பதாக என்னிடம் தெரிவித்தார். அவர்களை என்னை சந்திக்க அழைத்து வாருங்கள், அவர்களிடம் ஆலோசிக்கிறேன் என கூறினேன். ஏனென்றால், பாஜக நம்மை மிகவும் மோசமாக நடத்தினர். அவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை.
எது நட்புறவு?: அதிருப்தியாளர்கள் பலரின் மீதும் பல்வேறு புகார்கள் உள்ளன. எனவே, பாஜக உடன் சென்றால் அனைத்து புகார்களும் போய்விடும் என்பதாலும் நம்மோடு இருந்தால் சிறைக்கு போய்விடுவார்கள் என்பதாலும்தான் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதுதான் நட்புறவு என்பதா?.