ஹைதராபாத் (தெலங்கானா): காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இன்று (செப் 17) நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஹிந்து பரிஷத்தை தோல்வி அடையச் செய்வதை இலக்காக நிர்ணயம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறும்போது, “2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிப்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். மேலும், 2024-இல் பா.ஜ.க அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதே காங்கிரஸ் தலைவராக இருந்த காந்திக்கு நாம் செய்யும் பொருத்தமான நிகழ்வாக இருக்கும்” என தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் கார்கே கூறும்போது, “எதிர்வரும் சவால்கள் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்த சவால்கள் நமக்கு மட்டும் அல்ல, இந்திய ஜனநாயகத்திற்குமானது. இந்திய அரசியல் அமைப்பைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மத்திய அரசு குழுவை அமைத்துள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:மோடி அரசு முழு தோல்வி அடைந்துள்ளது..! காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே கடும் விமர்சனம்!
அதேபோல், “ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ற தனது குறிக்கோளுக்காக மத்திய பா.ஜ.க அரசு அனைத்து மரபுகளையும் மீறி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை குழுவின் தலைவராக நியமித்துள்ளனர். காங்கிரஸ் அரசியல் சட்டத்திற்கு அடித்தளமிட்ட மாபெரும் பழைய கட்சி என்ற முறையில், அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது நமது கடமை.
எனவே, நமது இறுதி மூச்சு இருக்கும் வரை நாம் அனைவரும் போராட வேண்டும். மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அரசை தோற்கடிப்பதை நாம் குறிக்கோளாக கொள்ள வேண்டும். 2024ஆம் ஆண்டு, காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றாண்டைக் கொண்டாடும்போது பா.ஜ.க அரசை தோல்வி அடைய செய்து இருப்பதே சரியானதாக இருக்கும்” என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்பட அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராக இருக்க வேண்டும். சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான அரசுகள், சமூக நீதி மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றில் புதிய மாதிரி முன்னோடியாக உள்ளனர். இந்த நலத்திட்டங்கள் குறித்து நாடு முழுவதும் நாம் விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் கார்கே தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்கள், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் ஆகியோர் தங்கள் குழுக்களை தயார் செய்து முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தும், சரியான வேட்பாளர்களை அடையாளம் காண வேண்டும் எனவும், இது நமக்கு ஓய்வு எடுப்பதற்கான நேரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்.. மகளிருக்கான இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க காங்கிரஸ் முடிவு!