டெல்லி:நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரின் 11வது நாள் அவை இன்று கூடியது. இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர்கள், ராஜ்யசபா எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறையில் கூடி, நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் குறித்து ஆலோசித்தனர். எதிர்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரத்தில், உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கோரி இரு அவைகளிலும் அறிக்கை கேட்க உள்ளதாகவும், உள்துறை அமைச்சரை பதவி விலகக் கோருவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மாறும் முன், முறையான ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். இவ்வளவு பெரிய பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது, ஆனால் பிரதமரிடம் இருந்தோ அல்லது எதிர்கட்சித் தலைவரிடம் இருந்தோ இதுவரையில் எந்த அறிக்கையும் இல்லை. இந்த சம்பவம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பிற்கே உத்திரவாதம் இல்லை என்றால், நாட்டின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவார்கள்?” எனத் தெரிவித்தார். பின்னர் இது குறித்து பேசிய சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்ரே அணி எம்.பி பிரியங்கா சதுர்வேதி, “இது மிகப்பெரிய பாதுகாப்பு மீறல். இது நாட்டுக்கே அவமானம். மூன்று அடுக்கு பாதுகாப்பு இருந்த போதிலும், இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. உள்துறை அமைச்சர் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும். 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தில் இருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம்” எனத் தெரிவித்தார்.
சிவசேனா கசியின் உத்தவ் தாக்ரே அணியின் எம்.பி., சஞ்சய் ராவத் இதுகுறித்து பேசுகையில், “நாடாளும்னறத்தில் நிகழ்ந்த பாதுகாப்பு மீறல் மூலம் நாட்டின் எல்லையில் நிலவும் பாதுகாப்பை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். சீனாவின் ராணுவம் லடாக்கில் எப்படி நுழைந்தது, பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் எப்படி ஊடுருவினார்கள், மணிப்பூருக்குள் பயங்கரவாதிகள் எப்படி நுழைந்தார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
நமது நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளது. ஆனாலும் சிலர் அத்துமீறி அவைக்குள் நுழைந்துள்ளனர். பிரதமரும், உள்துறை அமைச்சரும் அந்த விவகாரத்தில் அமைதி காக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் ஒரு மாத காலமாக தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்து விட்டனர்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி பிரமோத் திவாரி, “பாஜக எம்.பி அளித்த பாஸ் மூலம் இரண்டு பேர் நாடாளுமன்றத்தில் நுழைந்து உள்ளனர். எம்.பி உடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால், அரசு இந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டபட்டு தலைமறைவாக உள்ள லலித் ஜா ஒரு பழங்குடியினர் மேம்பாட்டிற்காக செயல்படும் தொண்டு நிறுவனத்தில் செயல்பாட்டாளராக இருந்துள்ளார். லலித் ஜா, அவரது சகாக்கள் நாடாளுமன்றத்தில் ஊடுருவிய வீடியோவை தொண்டு நிறுவனத்தின் நிறுவனருக்கு அனுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் புருலியா மாவட்டத்தில், பழங்குடியினரின் கல்வி மேம்பாட்டிற்காக செயல்படும் அந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் நிலாஷா ஐச்ஹ் அளித்துள்ள பேட்டியில், “நேற்று மதியம் 12.50 மணி அளவில் வீடியோவைப் பார்க்கும்படி கூறினார். நான் அப்போது கல்லூரியில் இருந்ததால் பார்க்கவில்லை.
பின்னர் வீடு திரும்பியதும், முழு வீடியோவையும் பார்த்தேன். அந்த வீடியோவை வைத்திருக்கும்படி என்னிடம் கூறினார். அவர் எனக்கு நெருங்கிய நண்பர் எல்லாம் இல்லை. பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக நான் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தில் (NGO) அவர் உறுப்பினராக உள்ளார். நான் அவரை ஏப்ரல் மாதத்தில் சந்தித்தேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும், குற்ற ம்சாட்டப்பட்டவர் குறித்து கேட்கப்பட்டதற்கு, “அவரைப் பற்றி எதையும் என்னிடம் கூறியதில்லை. அவரை பற்றிய தகவல்கள், அவர் குடும்பம் குறித்த தகவல்கள் என எதையும் அவர் குறிப்பிட்டதில்லை, அனைத்தையும் ரகசியமாகவே வைத்திருந்தார். மேலும் அவர் எந்த வன்முறைகளில் ஈடுபட்டும் நான் பார்த்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஊபா சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120-பி குற்றசதி, 452 அத்துமீறி நுழைதல், 153 கலவரத்தை ஏற்படுத்தும் எண்ணத்துடன் செயல்படுதல், 186 அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், 353 தாக்குதல் மற்றும் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், விசாரணைக்காக இந்த வழக்கு சிறப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர், லலித் ஜா அந்த வீடியோவை தொண்டு நிறுவன நிறுவனருக்கு அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேருடன் தொடர்புடைய விக்கி என்பவரும் அவருடைய மனைவியையும் கைது செய்து விசாரித்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள லலித் ஜாவைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தை கண்டிக்கிறேன்.. என் மகன் செய்தது தவறு என்றால் தூக்கிலிடுங்கள்..! அத்துமீறி நுழைந்தவரின் தந்தை பேட்டி!