லக்னோ : பிரபல ரவுடியும் அரசியல்வாதியுமான அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் ஆகியோரை போலீசார் முன்னிலையில் மர்ம நபர்கள் நடுரோட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடிக் அகமது துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சட்டம் ஒழுங்கை மோசமான நிலைக்கு கொண்டு சென்றதாகக் கூறினார்.
அகிலேஷ் யாதவ் தன் ட்விட்டர் பக்கத்தில், "உத்தரப் பிரதேசத்தில் குற்றச்செயல்கள் உச்சத்தை எட்டி உள்ளதால் குற்றவாளிகளின் மன உறுதியும் அதிகரித்து உள்ளது. போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் புகுந்து பகிரங்கமாக துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவர் கொல்லப்படும் போது, பொது மக்களின் பாதுகாப்பு என்னவாகும்? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. சிலர் வேண்டுமென்றே இப்படியான சூழலை உருவாக்குவது தெரிகிறது" எனப் பதிவிட்டு உள்ளார்.
அதேபோல் அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் கொலைச் சம்பவம் இரக்கமற்றச் செயல் என்றும்; இது மாநிலத்தில் அராஜகத்தின் உச்சபட்ச சூழல் நிலவுவதை எடுத்துக் காட்டுவதாகவும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி தெரிவித்து உள்ளார். மேலிடத்தின் உந்துதல் இல்லாமல் இதுபோன்ற துப்பாக்கிச்சூடுகள் நடைபெறாது என்றும்; ஜனநாயக ஆட்சியில் சட்டத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றத்திற்கு மாநில அரசினை கலைத்திருக்க வேண்டும் என அவர் கூறினர்.
மாநிலங்களவை உறுப்பினரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபில், ரவுடிகளுடன் சேர்த்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கும் படுகொலை செய்யப்பட்டதாக கூறினார். வழக்கறிஞர் உமேஷ் பால் கடத்தல் வழக்கில் ரவுடி அடிக் அகமது, அவரது சகோதரர் அஸ்ரப் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.