மும்பை:மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ஓரணியில் இணையும் பணியில் இறங்கிய எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று (ஆக.31) தொடங்கியது. நாளை வரை நடக்கும் இக்கூட்டத்தில் 28 கட்சிகளின் 63 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி செய்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவது, நரேந்திர மோடியை தோற்கடிப்பது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. இக்கூட்டணியின் முதலாவது கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் நடைபெற்ற நிலையில், இதற்கான பொறுப்புகளை பிகார் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் மேற்கொண்டு நடத்தினர்.
முன்னதாக, பெங்களூருவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 26 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடக்கும் என்றும் அதில் 28 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் என்றும் கூட்டத்திற்கு ஒருநாள் முன்பே அறிவித்து இருந்தார்.
இதனிடையே, இன்று தொடங்கியுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மகாராஷ்டிர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் நானா படோல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் அக்கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் சிவசேனா கட்சி (Shiv Sena - UBT) தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரரும் மேற்கு வங்கம் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தேசிய காங்கிரஸ் தலைவர் ஃபரூக் அப்துல்லா என பல தலைவர்களை கொண்ட இந்த ஆலோசனை கூட்டம், இந்தியாவில் பாஜகவிற்கு எதிராக நடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நேற்று உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய மம்தா, அவருக்கு 'ராக்கி' கட்டிவிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணியின் குழுத்தலைவர் யார்? மற்றும் தொகுதி பங்கீடு குறித்த விவாதங்கள் தொடர்பான தகவல்கள் இந்த இரண்டு நாள் கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரியவருகிறது. நெருங்கும் தேர்தலையொட்டி, விறுவிறுப்பாக நடந்துவரும் இக்கூட்டணியின் ஆலோசனைகள் முக்கிய கட்டத்தை எட்டிவரும் நிலையில், இந்த கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:'I.N.D.I.A' கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் மு.க.ஸ்டாலின்.. மும்பையில் நடப்பது என்ன?