டெல்லி: மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலமாக இஸ்ரேலில் இருந்து நேபாளத்தை சேர்ந்த 2 பேர் உட்பட 143 பயணிகளுடன் 6-வது சிறப்பு விமானம் இன்று (அக். 23) அதிகாலை டெல்லி வந்தடைந்தது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இஸ்ரேல் பகுதிகளில் சிக்கி உள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக, மத்திய அரசு ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதன்படி, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக மீட்டு, சிறப்பு விமானங்கள் மூலமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் சிக்கி உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
இதையும் படிங்க:"ககன்யான் திட்டத்தில் பெண் போர் விமானிகளை இஸ்ரோ அதிகளவில் எதிர்பார்க்கிறது" - சோமநாத் தகவல்!
இத்திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 5 சிறப்பு விமானங்களில் மொத்தம் ஆயிரத்து 200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்து உள்ளார். மேலும், காசாவில் இருந்து இந்தியர்களை தற்போது வெளியேற்றுவது கடினம் என்றும் அவர் கூறி உள்ளார்.
இதற்கிடையே, மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியர்களை அழைத்துக் கொண்டு 6வது சிறப்பு விமானம் நேற்று (அக். 22) மாலை டெல்லி புறப்பட்டது. இந்நிலையில், இன்று (அக். 23) அதிகாலை டெல்லி வந்த 6-வது சிறப்பு விமானம் மூலமாக 2 நேபாள குடிமக்கள் உள்பட 143 இந்நியர்கள் டெல்லி வந்தடைந்து உள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தன்னுடைய எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
மேலும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையேயான போரில் அங்குள்ள இந்நியர்களை மீட்பதில் மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலமாக மேற்கொண்ட முயற்சியில், இதுவரை நேபாளம் குடிமக்கள் உட்பட ஆயிரத்து 343 பேர் சிறப்பு விமானங்களின் மூலமாக மத்திய அரசால் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், மத்திய அரசின் உதவியுடன் டெல்லி வரும் தமிழகர்களை, தமிழ்நாடு அரசு சார்பில் அழைத்து வரப்பட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க:Telangana Assembly election : பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சர்ச்சை பேச்சு எம்.எல்.ஏ. ராஜா சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு!