நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "நாட்டில் தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஏன்? வெளிநாடுகளுக்கு கரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு உதவ வேண்டும். வெளிநாட்டில் செயல்பாட்டிற்கு வந்துள்ள கரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி தரவேண்டும்.
தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு மோசமாக செயல்படுத்துவதன்மூலம், விஞ்ஞானிகள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களின் முயற்சிகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. தற்போதைய விகிதத்தில் தடுப்பூசி போடப்பட்டால், 75 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி போட பல ஆண்டுகள் ஆகும்.
இது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் இந்தியாவின் பொருளாதாரத்தையும் கடுமையாகக் வீழ்ச்சியடைய செய்யும். தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில், ஒரு தனிப்பட்ட நபரின் புகைப்படத்தை வெளியிடுவதை தாண்டி, அதிகபட்ச தடுப்பூசிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.