டெல்லி:நாடு முழுவதும் இனி இந்திய தர நிர்ணய பணியகத்தின் (BIS) சான்றிதழ் பெற்ற தலைகவசங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தரம் குறைவான தலைகவசங்கள் தயாரிப்பை தடுக்கவும், அதனால் ஏற்படும் சாலை விபத்து உயிரிழப்புகளை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைவகசம் குறித்த அறிவிப்பில், "இனி இருசக்கர வாகன ஓட்டிகள் பிஎஸ்ஐ சான்றிதழ் பெற்ற தலைகவசங்களையே அணிய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சாலை பாதுகாப்பு கமிட்டி சார்பில், நாட்டின் வெப்பநிலைக்கு ஏற்றவாறு எடைக்குறைந்த ஹெல்மெட்டுகளை தயாரிப்பதுதொடர்பாக, புதிய கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டது. இதில், டெல்லி எஸ்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், பிஐஎஸ் உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு இக்கமிட்டி தாக்கல் செய்த தலைகவசங்கள் குறித்த விரிவான அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து, குறைந்த எடைக்கொண்ட தலைகவங்களின் தரம் குறித்து பிஐஎஸ் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. நாடு முழுவதும் ஒரு ஆண்டுக்கு ஒரு கோடியே 70 லட்சம் இருச்சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற தலைகவசங்கள் மட்டுமே இனி உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஜெனிவாவைச் சேர்ந்த சாலைப் பாதுகாப்புக்கான சர்வதேச சாலை கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இதையும் படிங்க:சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு - மத்திய அரசு