திருவனந்தபுரம்:குரங்கம்மையை உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மொத்தமாக 75 நாடுகளில் 16,000-க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அதிகம் பதிவாகிவருகிறது. இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு முதலாவதாக ஜூலை 14ஆம் தேதி கேரளாவில் பதிவானது. இதையடுத்து, டெல்லியிலும் பதிவாகியது.
அந்த வகையில், கேரளாவில் 4 பேருக்கும் டெல்லியில் 2 பேருக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கேரளா மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 30 வயதான நபர் மலப்புரத்தை சேர்ந்தவர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஜூலை 27 கோழிக்கோடு வந்தார். அவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.