பெங்களூரு (கர்நாடகா): மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகரான வி.கே.குருசாமி, கடந்த செப்டம்பர் 4 அன்று பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், குருசாமியை ஆயுதங்களால் கடுமையாக தாக்கிவிட்டு, அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து, குருசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, இது தொடர்பாக பனாஸ்வதி ஏசிபியின் தலைமையின் கீழான சிறப்புக் குழு தமிழ்நாட்டின் மதுரை மற்றும் தருமபுரி ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த நிலையில், மதுரையில் இருந்து பிரசன்னா என்ற நபரை சிறப்பு காவல் குழுவினர் கைது செய்து உள்ளனர். இதனையடுத்து, அவர் மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு தமிழ்நாடு காவல் துறையினரால் கொண்டு வரப்பட்டு உள்ளார். மேலும், இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வி.கே.குருசாமி மீதான தாக்குதலுக்கு முன்பகை காரணமா?மதுரை மாவட்டம் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர், திமுக பிரமுகர் வி.கே.குருசாமி. இவர் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவராகவும், கிளைச் செயலராகவும் இருந்து உள்ளார். அதேபோல், இதே பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் மண்டலத் தலைவர் மறைந்த ராஜபாண்டி.