பஸ்தார் (சத்தீஸ்கர்):சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் கோட்டையாக இருந்த பஸ்தார் பகுதியிலுள்ள கிராமங்களில் முதல் முறையாக வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தாரின் சந்தமேட்டா கிராமம், ஜக்தல்பூர் மாவட்டத்தில் வருகிறது. இந்த சந்தமேட்டா கிராமம் பல வருடங்களாக நக்சலைட் கோட்டையாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த கிராமத்தில் காவல் துறை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு பள்ளிக்கூடம் கட்டப்பட்டது மேலும் சுதந்திர தினத்தன்று முதன் முறையாக இந்தியத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சந்தமேட்டா கிராமத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கும் போது, சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முறையாக எங்கள் கிராமத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு 335 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கு முன்பு வாக்களிப்பதற்கு 6 கி.மீ மிகவும் ஆபத்தான மலைப்பகுதியில் பயணம் மேற்கொண்டு சிந்த்கூர் கிராமத்திற்குச் சென்று வாக்களிக்க வேண்டும். இதனால் மூத்த வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது அந்த நிலை மாறி தங்களது சொந்த கிராமத்தில் வாக்களிப்பது சந்தோஷம் தருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தெலங்கானா பெண்களுக்கு மாதம் 4,000 ரூபாய் - ராகுல் காந்தி அறிவிப்பு!