கடந்த சில நாள்களாக இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு வேகமாக அதிகரித்துவருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தற்போதைய நிலவரப்படி, நாட்டின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 415ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 415 பேரில் 115 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். ஒமைக்ரான் பரவல் குறித்து மக்களிடம் அச்சம் நிலவிவரும் நிலையில், இந்த உருமாறிய தொற்று குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், முன்னணி சர்வதேச அமைப்புகள் சில முக்கிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளன.
தடுப்பூசி செலுத்தினாலும் பரவும்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் படி, நாட்டில் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளான 183 பேரை ஆய்வுக்கு உட்படுத்திய போது, அதில் 121 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்த 183 பேரில் 91 விழுக்காட்டினர் முழுமையாக இரு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளன 10இல் ஒன்பது பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்தான் என்பதால், தடுப்பூசி செலுத்தியவர்களும் அலட்சியத்துடன் இல்லாமல் கவனத்துடன் இருக்க வேண்டும். முகக்கவசம் உள்ளிட்ட கோவிட் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது.