டெல்லி: இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த விலை ஏற்றத்தால் ஆட்டோ, பேருந்து முதல் விமானம் வரை அனைத்தின் பயணக் கட்டணங்களும் கிடு கிடுவென உயர்ந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய பாஜக அரசுக்கு எதிர்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் என பலரும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரை அதில் எந்த முன்னேற்றமும் காணாமல் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை நோக்கியே சென்றுகொண்டு இருக்கிறது. இதன் காரணத்தால் மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில் தற்போது எண்ணை சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனா காலகட்டத்தில் பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனங்கள் கடந்த காலண்டில் அதை ஈடு கட்டி விட்டதாகவும், இதன் காரணத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க முன் வந்துள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தகவல் அளிக்கின்றன.