புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோரில், இரண்டு பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் மோதிய விபத்தில், 290 பேர் உயிரிழந்து இருந்த நிலையில், 1,200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் 81 அடையாளம் தெரியாத சடலங்களில், 29 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அவர்களின் உறவினர்களிடம் நேற்று (ஜூன் 30) ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டதால், புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 81 பயணிகளின் உடல்கள், கண்டெய்னரில் வைக்கப்பட்டு இருந்தன. அடையாளம் காணும் பணியில் ஏற்பட்ட குழப்பத்தை கருத்தில் கொண்டு, 78 உடல்களின் மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
இவர்களில், 29 பேரின் உடல்கள், டிஎன்ஏ மேட்சிங் முறையில் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் பிகார், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இறந்தவர்களின் உடல்களை, அவர்களின் உறவினர்கள் விரைவில் பெற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான இலவச தங்குமிடம் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜூன் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த இரண்டு பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் மோதிய விபத்தில், 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 1200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இறந்தவர்களில் சிலரை உடல் ரீதியாக அடையாளம் காண முடியாமல் போனதாலும், சில உடல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உரிமைக் கோரல்கள் இருந்ததாலும், டிஎன்ஏ மேட்சிங் சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ மாதிரிகளை வழங்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜுன் 29) கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பயணி உயிரிழந்ததைத் தொடர்ந்து, ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 293 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தவர் பிகாரின் ஜமுய் பகுதியைச் சேர்ந்த மணீஷ் குமார் (24) என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மற்றொரு பயணியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ரயில் விபத்தில் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்கக எஸ்சிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 40 பயணிகளில், 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: Maharashtra: மகாராஷ்டிராவில் திடீரென தீ பிடித்த பேருந்து - 25 பேர் உடல் கருகி உயிரிழப்பு!