ஒடிசா:15-வது உலக கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரை இந்தியா நடத்துகிறது. வரும் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை ஒடிசாவின் ரூர்கெலா மற்றும் புபனேஸ்வர் நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக ரூர்கெலாவில் புதிதாக மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
ரூர்கெலாவில் உள்ள பிர்சா முண்டா மற்றும், புபனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானங்களில் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன. உலக கோப்பை ஹாக்கி தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஹாக்கி கோப்பை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் சிங் இந்திய அணியின் கேப்டனாகவும் ஒடிசாவைச்சேர்ந்த் அமீத் ரோகிதஸ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நட்சத்திர வீரர்கள் சுரேந்தர் குமார், வருண் குமார், ஜர்மன்பிரீத் சிங் மற்றும் நிலாம் சஞ்ஜீப் உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஜொலித்த கேரளாவைச் சேர்ந்த வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். நடுக்கள வீரர்கள் அண்மையில் காயத்தில் இருந்து குணமான விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
டி பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி, தனது பிரிவில் உள்ள இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகளை எதிர்த்து களம் காணுகிறது. ஜனவரி 13ஆம் தேதி ரூர்கெலாவில் உள்ள பிர்சா முண்டா மைதானத்தில் ஸ்பெயின் அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது.
அதே மைதானத்தில் இங்கிலாந்து அணியுடன் ஜனவரி 15ஆம் தேதியும், புபனேஸ்வர் மைதானத்தில் ஜனவரி 19ஆம் தேதி வேல்ஸ் அணியுடனும் இந்திய அணி அடுத்தடுத்து கோதாவில் இறங்குகிறது. சொந்த மண்ணில் நடைபெறும் ஹாக்கி உலக கோப்பையில் இந்திய அணி மகுடம் சூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:Australia Open 2023: டானிலினா உடன் இணையும் சானியா மிர்சா!