பாலசோர்:ஒடிசாவின்பாலசோர் அருகே நேற்றிரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 280க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைப் பறித்து 900ற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளில் மாநில மற்றும் தேசிய மீட்பு படைகள், பேரிடர் மீட்பு படைகள் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர். மேலும் பல்வேறு மாநில முதல்வர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து உள்ளனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த கோர விபத்து குறித்து ரயிலில் இருந்த பயணி ஒருவர் ட்விட்டரில் விவரித்துள்ளார்.
அனுபவ் தாஸ் என்ற பயணி நேற்றிரவு சென்னைக்கு புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயிலில், ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். சோரோ மற்றும் பாலசோருக்கு இடையே, இச்சாபூர் பகுதியில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஹவுராவில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். இச்சாபூர் அருகே சென்ற போது ரயில் தடம் புரண்டது. அப்போது அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, சில பெட்டிகள் மோதின. அந்த நேரம் எதிர் திசையில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயில், தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.