டெல்லி: 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை நிர்வாக அலுவலராகப் பதவி வகித்த சித்ரா ராமகிருஷ்ணா, பதவிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் பங்குச்சந்தையின் முன்னாள் குழும அலுவலரான ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
பங்குச்சந்தையின் தகவல்களை சாமியார் ஒருவருடன் பகிர்ந்ததாகவும் புகார் எழுந்தது. பங்குச்சந்தை ஊழல் வழக்கில், கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ரா மீது, கோ-லொக்கேஷன் உள்ளிட்டப் பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் மற்றொரு புகாரும் எழுந்தது.
கடந்த 2009 முதல் 2017 வரை, தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் அலுவலர்கள், ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாகவும், இதன் மூலம் என்எஸ்இ-க்கு சுமார் நான்கரை கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.