ஹைதராபாத்: சர்வதேச அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில், சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மிகச்சிறிய மாநிலம், சிக்கிம். அங்கு ஒட்டுமொத்த மக்கள் தொகை 6.9 லட்சம் தான். ஆனால், உலகளவில் சிக்கிம் மாநிலத்தை விட குறைந்தளவு மக்கள் தொகை கொண்ட நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
வாடிகன்:உலகின் மிகச்சிறிய நாடாக அறியப்படுவது, வாடிகன் சிட்டி. இந்நாட்டின் ஒட்டுமொத்த பரப்பளவே ஒரு சதுர கிலோ மீட்டர் தான். குடிமக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 518 பேர். இங்கிருக்கும் கத்தோலிக்க தேவாலயம் உலகளவில் பிரபலம். சிஸ்டைன் சேப்பல் (Sistine Chapel), செயின்ட் பீட்டர்ஸ் பேசிலிகா (St.Peter's Basilica), செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம் (St.Peter's Square) ஆகிய தேவாலயங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
டுவாலு: ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே இருக்கும் தீவு நாடு, டுவாலு. 26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நாட்டின் மக்கள் தொகை 11,396. கடல் மட்டம் உயர்வால் எப்போது வேண்டுமானாலும் நீரில் மூழ்கக்கூடிய அபாயகட்டத்தில் உள்ளது. படகு தயாரிப்பு இங்கு வசிக்கும் மக்களின் பிரதானத் தொழில். தேங்காய் மூலம் செய்யப்படும் உணவுகள் இங்கு பிரசித்தம்.
நயுரு:வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள தீவு நாடு, நயரு. இந்நாட்டின் மக்கள் தொகை 12,780. 21 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த நாட்டின் பிரதான தொழில் விவசாயம். அன்னாசி, வாழை, தென்னை பயிரிடப்படுகிறது.
பலாயு: மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் நாடு, பலாயு. 459 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் 18,058 பேர் வசித்து வருகின்றனர். 1914-1944 வரை ஜப்பான் அதிகாரத்தின் கீழ் இருந்தது. 1994ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. அழகான தீவுகளுக்கும், இயற்கை அழகுக்கும் பெயர் பெற்றது.