பாட்னா:தமிழ்நாட்டில் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதுதொடர்பாக உரிய ஆய்வு நடத்துவதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 அதிகாரிகள் கொண்ட குழு தமிழ்நாடு வந்துள்ளது. இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், "அதிகாரிகள் குழு தமிழ்நாட்டுக்கு சென்றுள்ளது. அவர்களது அறிக்கைக்காக காத்திருக்கிறேன். பீகாரில் ஒருசிலர் தவறாக நடந்து கொண்டால் ஒட்டுமொத்த மாநிலத்தையும் எதிராக பார்க்கக் கூடாது. இதேபோலத்தான் நாம் தமிழ்நாட்டையும் கருத வேண்டும்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக எந்த தாக்குதலும் நடைபெறவில்லை என அம்மாநில டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதுகுறித்து சட்டமன்றத்தில் நான் விளக்கம் அளித்தேன். இவ்விவாகரத்தில் முதற்கட்ட தகவலைப் பெறுவதற்காகத்தான் அதிகாரிகள் குழு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எங்களால் முடிந்தவற்றை செய்துள்ளோம். பீகாரை பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சி பாஜக. மத்தியில் அவர்கள் தலைமையிலான ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆனால், இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இவ்விவகாரம் குறித்து பாஜக அலட்சியம் காட்டி வருகிறது. இச்சம்பவத்தில் எந்த தலையீடும் இன்றி அக்கறை இல்லாமல் உள்ளது. தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என அம்மாநில பாஜக தலைவர், பீகார் பாஜக தலைவரிடம் தொலைபேசியில் உரையாடியது குறித்து நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது" என்று கூறினார்.