பெங்களூரு (கர்நாடகா): கடந்த 2017ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, சிறை தண்டனை முடிவுற்று விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சசிகலா சிறையில் இருந்தபோது சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டதாக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டினார். இதனையடுத்து, இது தொடர்பாக அப்போதையை சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார், சிறைத்துறை உதவி கண்காணிப்பாளர் அனிதா மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கஜராஜ குமார் ஆகிய மூவர் மீதும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில், கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து இந்த மூன்று அதிகாரிகளும் சொகுசு வசதிகளை சசிகலாவுக்கு ஏற்படுத்தி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சசிகலா கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார்.
இருப்பினும், இது தொடர்பாக லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கிற்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்த நிலையில், நேற்று (செப்.4) சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் இளவரசி ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையிலும் அவர்கள் ஆஜராகவில்லை. இந்த நிலையில், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதையும் படிங்க:ஜெயலலிதா மரண வழக்கில் தீவிரம் காட்டும் நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு புது உத்தரவு!