கொல்கத்தா: கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக் கான் பேசுகையில், 'சினிமா எல்லா வகையான நிறம், இனம், மதம், சாதி போன்றவைகளைச் சேர்ந்த மக்களுக்கும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளப் பயன்படும் ஓர் பாலமாகத் திகழ்ந்து வருகிறது.
எது நடந்தாலும் நம்மைப் போன்றோர் மகிழ்ச்சியாகத் தான் இருப்போம்' என்றார். ஷாருக் கான் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘பதான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பேஷாராம் ரங்’ எனும் பாடல் குறிப்பிட்ட ஓர் சமூகத்தினரை இழிவுபடுத்துவதாக கருதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் அந்தப் பாடலை நீக்கக்கோரி, போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் ஷாருக் கான் இப்படிப் பேசியுள்ளார்.
மேலும், இந்த 28ஆவது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் சேர்ந்து தொடங்கி வைத்தனர். இந்த விழாவில், நடிகை ராணி முகர்ஜி, நடிகர் மகேஷ் பாபு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேற்கு வங்காளத்தின் தகவல் மற்றும் கலாசாரத் தொடர்புத்துறை அமைச்சகம் நடத்தும் இந்த சர்வதேச திரைப்பட விழா டிச.15 - 22 வரை கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் இயக்குநர் சித்தார்த்ப் ஆனந்த் இயக்கத்தில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘பதான்’ அடுத்த ஆண்டு ஜனவரி இறுதியில் வெளியாகத் தயார் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அஜித்தை விட விஜய் பெரிய ஸ்டார்.. ரசிகர்களை சீண்டிய ’வாரிசு’ தயாரிப்பாளர்..