பாட்னா: பிகாரில் பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். நிதிஷ்குமாரின் இந்த நடவடிக்கைக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். நிதிஷ்குமார் குடியரசுத் துணைத் தலைவராக ஆசைப்பட்டதாகவும், அது நிறைவேறாமல் போனதாலேயே அவர் பாஜகவுடனான கூட்டணியை முறித்ததாகவும் பிகார் மாநில பாஜக தலைவர் சுஷில்மோடி குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் இருவரும், ’ஷாஹீத் திவாஸ்’ தினத்தையொட்டி பாட்னாவில் உள்ள ஷாஹீத் பூங்காவில் 'வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்' தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.
அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம், சுஷில் மோடியின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், "அது முற்றிலும் போலியான ஒரு கூற்று. நான் குடியரசுத் துணைத் தலைவராக ஆசைப்பட்டேன் என்று கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது. எனக்கு அப்படி எந்தவித ஆசையும் இல்லை. குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்களில் பாஜக வேட்பாளர்களை நாங்கள் எவ்வளவு ஆதரித்தோம் என்பதை மறந்துவிட்டார்களா? பாஜகவினர் மீண்டும் பதவிக்கு வருவதற்காகவே எனக்கு எதிராக பேசுகிறார்கள், பேசட்டும்" என்று கூறினார்.
பிகாரில் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஜேடியுவை அழிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டதால், நிதிஷ்குமார் அழுத்தத்தில் இருந்தார் - தேஜஸ்வி யாதவ் பிரத்யேக பேட்டி!