பாட்னா: பிகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் முதலமைச்சராக உள்ளார்.
தற்போது பிகார் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தநிலையில், லக்கிசராய் தொகுதி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள், பாஜக எம்எல்ஏக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, லக்கிசராய் தொகுதிக்கு சபாநாயகர் விஜய் சின்ஹா சென்றபோது, அவரிடம் காவல் துறை உயர் அலுவலர்கள் மூன்று பேர் தவறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பிகார் சபாநாயகர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபியுடம் முறையிட்டார்.
சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சியினரும், பாஜகவினரும் மாநில அரசை விமர்சித்து வருகின்றனர்.