டெல்லி:இந்திய ஓட்டுநர்களை கெளரவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள ‘தேஷ் சாலக்’ (Desh Chaalak) என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
இதனையடுத்து விழாவில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “போக்குவரத்து துறையில் ஓட்டுநர்களின் பங்கு மிகப் பெரியது. வளர்ந்து வரும் உலக பொருளாதாரச் சூழலில் போக்குவரத்து ஒரு முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், அதில் பணியாற்றி வரும் ஓட்டுநர்களின் பணி நிலை மற்றும் அவர்களின் மனநிலையை கவனத்தில் கொள்வது தேவையான ஒன்றாக உள்ளது. அவர்கள் அதிகப்படியான வெப்ப நிலையில் பணிபுரிவதற்கு தள்ளப்படுகிறார்கள்.
எனவே, லாரி ஓட்டுநர்களுக்கு குளிரூட்டப்பட்ட கேபின்கள் அமைப்பது தேவைப்படும் ஒன்றாக மாறி உள்ளது. ஆனால், இதனால் செலவு அதிகரிக்கும் என சிலர் இதனை எதிர்க்கின்றனர். இருப்பினும், நான் இங்கு வருவதற்கு முன்னதாக இனி லாரிகளில் உள்ள ஓட்டுநர் கேபின் ஏசியால் குளிரூட்டப்பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டு வந்துள்ளேன்.
ஓட்டுநர்களின் பணி நிலையை உயர்த்துவதற்கான தேவை அதிகரித்துள்ளது. வாகன ஓட்டுநர் பள்ளிகளை அதிகமாக்குவதால் ஓட்டுநர்களின் பற்றாக்குறைய குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். சர்வதேச அளவில் இந்தியா வேகமாக முன்னேறும் நாடாக உள்ளது. அதிலும், நாட்டில் தளவாடங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.