தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயன் பட பாணியில் வயிற்றில் போதைப்பொருள்கள் கடத்தல் - நைஜீரியா பயணி சிக்கியது எப்படி? - Nigerian Passenger arrest in bengaluru airport

சினிமா பாணியில் வயிற்றில் கேப்சியூல் வடிவில் போதைப் பொருளை கடத்த முயன்ற நைஜீரியா பயணியை பெங்களூரு வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

Cocaine
Cocaine

By

Published : May 16, 2023, 3:39 PM IST

பெங்களூரு : நடிகர் சூர்யாவின் அயன் பட பாணியில் கொக்கைன் போதைப் பொருளை கேப்சியூல் வடிவில் வயிற்றில் வைத்து கடத்தி வந்த நைஜீரியா நாட்டவரை பெங்களூரு வருவாய்ப் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம், அயன். இந்தப் படத்தில் நடிகர் ஜெகன், கொக்கைன் போதைப் பொருளை கேப்சியூல் வடிவில் மாற்றி அதை விழுங்கி கடத்துவார். தற்போது இதேபோன்ற ஒரு சம்பவம் பெங்களூரு விமான நிலையத்தில் அரங்கேறி உள்ளது.

எத்தியோப்பியா நாட்டில் இருந்து பெங்களூரு, ஹெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தை வழக்கம் போல் சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்ட போது, நைஜீரியா நாட்டில் இருந்து வந்த பயணி ஒருவர் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நைஜீரியா பயணிக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கிய போதும், அவர் சாப்பிட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்து பார்த்து உள்ளனர். அவரது வயிற்றில் உருளை வடிவில் கேப்சியூல்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

சிகிச்சை மூலம் அந்த கேப்சியூல்களை வெளியே எடுத்து அதிகாரிகள் பரிசோதித்ததில் அவை அனைத்தும் கொக்கைன் போதைப் பொருள்கள் என்பது தெரியவந்தது. 64 கேப்சியூல்களில் 1 கிலோ எடை மதிப்பிலான கொக்கைன் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இதன் சர்வதேச சந்தை மதிப்பு 11 கோடி ரூபாய் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நைஜீரியா நாட்டுப் பயணி மருத்துவ சிகிச்சைக்காக மெடிக்கல் விசாவில் இந்தியா வருவது போல் போதைப் பொருளை கடத்தி வந்ததாக அதிகாரிகள் கூறினர். நைஜீரியா பயணியை கைது செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக போலீசார், அவரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு உள்ளூர் அளவில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இதே ஹெம்பகவுடா விமான நிலையத்தில், பாங்காக்கில் இருந்து 50 லட்ச ரூபாய் மதிப்பிலான யுரோ பணத்தை கடத்த முயன்ற இரு பயணிகளை வருவாய் புலனாய்வு இயக்குநரகப் போலீசார் கைது செய்தனர். சூட்கேசில் உடைமைகளுக்குள் மறைத்து வைத்து பணம் கடத்த இருந்த முயற்சியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் தங்கப் பசையை செருப்புக்குள் வைத்தும், தங்கத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஜீன்ஸ் பேண்ட்டுக்குள் வைத்தும் கடத்த முயன்ற சுற்றுலாப் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். நூதன முறையில் ஒவ்வொரு தடவையும் தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை கடத்தல்காரர்கள் கடத்த முயற்சிப்பதும் அதை சுங்கத்துறை அதிகாரிகள் தடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

இதையும் படிங்க :ஆட்சியே அமைக்கல அதுக்குள்ள கரண்ட் பில் பிரச்னை! - கர்நாடகாவில் நிலவும் அக்கப்போர்!

ABOUT THE AUTHOR

...view details