ஜம்மு காஷ்மீர்:பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மற்றும் நிதியுதவி அளிப்பவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்ததாகப் பலர் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளும் நடத்தப்படுகின்றன. குறிப்பாக தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா, சோபியான், அனந்த்நாக், ஸ்ரீநகர் மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, மாநில புலனாய்வு அமைப்பு மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கடந்த மே மாதம் ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபோரா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 15 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதாக சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 11ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது. பயங்கரவாத தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.