ஹைதராபாத்:தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ்(கேசிஆர்) தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தின் புதிய தலைமைச் செயலகத்தை, இன்று (ஏப்ரல் 30) அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். மிகவும் பிரமாண்டமான மாளிகை போன்று காட்சி அளிக்கும் இந்த புதிய தலைமைச் செயலகத்தை திறப்பதற்காக காலை 6 மணிக்கு தொடங்கிய சுதர்சன யாகம், பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைந்தது.
இதனையடுத்து, புதிய தலைமைச் செயலகத்தின் 6-வது மாடியில் உள்ள முதலமைச்சர் அறைக்கு கேசிஆர் சென்றார். 28 ஏக்கர் நிலத்தில் 10 லட்சத்து 51 ஆயிரத்து 676 சதுர அடி அளவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய தலைமைச் செயலகம், 265 அடி உயரம் கொண்டது. இதன் கட்டுமானப் பணிகளுக்காக, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று முதலமைச்சர் கேசிஆர் அடிக்கல் நாட்டினார்.
ஆனால், கரோனா பெருந்தொற்றின் கட்டுப்பாடுகள், நீதிமன்ற வழக்குகள் உள்படப் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு ஜனவரியில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. மேலும், 265 அடியில் கட்டப்பட்டுள்ள தெலங்கானா மாநிலத்தின் புதிய தலைமைச் செயலகம், நாட்டிலேயே உயரமான தலைமைச் செயலகம் என அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இதன் கட்டுமானம், சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறை, இந்திய பசுமை கட்டட கவுன்சில், தெலங்கானா மாநில தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தெலங்கானா மாநில காவல் துறை ஆகியவற்றின் வழிகாட்டுதல்களோடு கட்டப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அமைச்சர்களின் அலுவலகம் ஒரு இடத்திலும், அவர்களின் துறை சார்ந்த அதிகாரிகளின் இருப்பிடம் வேறொரு இடத்திலும் இருந்து வந்தது. ஆனால், தற்போது கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த பணிகளை ஒரே இடத்தில் விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.