டெல்லி:டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 5 இளைஞர்கள் சென்ற கார் இரு சக்கர வாகனத்தில் மோதி இளம் பெண் அஞ்சலி 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
வழக்குத்தொடர்பாக 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அஞ்சலியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும்; தலை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் 40-க்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வழக்குத் தொடர்பாக தலைமறைவான அஞ்சலியின் தோழி நிதி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அஞ்சலி உயிரிழப்பில் நிலவிய மர்ம கேள்விகளுக்கு, திடுக்கிடும் தகவல்கள் பதிலாக கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு காவல் ஆணையர் சாகர் பிரீத் ஹூடா செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது, 5 பேரிடம் நடத்திய விசாரணையில் சம்பவ நேரத்தில் தீபக் காரை செலுத்தவில்லை என்றும்; அமீத் என்பவர் காரை இயக்கியதாகவும் தெரிவித்தார். மேலும் வழக்கில் 5 பேர் சம்பந்தப்பட்டதாக கருதப்பட்ட நிலையில் 7 பேருக்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறினார்.
வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர், அசுதோஷ், அங்குஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இருவரையும் விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விபத்து ஏற்படுத்திய கார் அசுதோஷுக்கு சொந்தமானது என்றும், விபத்து நடந்த நேரத்தில் அமீத் தான் காரை செலுத்தியதாகவும், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாததால், அமீத்திற்கு பதிலாக காரை ஓட்டியதாக தீபக்கை கூறுமாறு, அங்குஷ் வலியுறுத்தியதாகவும் காவல் ஆணையர் ஹூடா தெரிவித்தார்.
பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் விபத்து நடந்த நேரத்துடன் ஒத்துப்போகவில்லை என்று ஹூடா தெரிவித்தார். மேலும் அஞ்சலியின் ஸ்கூட்டி மட்டுமே கைப்பற்றப்பட்ட நிலையில் அவரது செல்போனை தேடி வருவதாக கூறினார்.
கடந்த டிசம்பர் 29, 31 ஆகிய தேதிகளில் நிதி மற்றும் அஞ்சலி 25 முதல் 30 முறை செல்போனில் பேசி உள்ளதாகவும், இது குறித்தும் விசாரித்து வருவதாகவும் சிறப்பு காவல் ஆணையர் ஹூடா தெரிவித்தார். மேலும் வழக்கிற்குத் தேவைப்படும் பட்சத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான நார்கோ டெஸ்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
அஞ்சலி உயிரிழந்து 5 நாட்கள் கடந்த நிலையில் அவர் எத்தனை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார் என்பதற்கான துல்லியமான தகவல்கள் போலீசாரிடம் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் வழக்கில் 7 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில், அஞ்சலியின் தோழி நிதி குறித்த தகவல்கள் மர்மமாக இருப்பதாக தெரியவருகிறது.
இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு வழக்கில் விரைவில் முடிவு - இறுதிகட்ட விசாரணையில் உச்ச நீதிமன்றம்!