டெல்லி:புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரூ.75 நாணயம் மற்றும் நினைவு தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரூ.75 நாணயத்தின் மையத்தில் அசோக சின்னமும், அதில் 'சத்யமேவ் ஜெயதே' (வாய்மையே வெல்லும்) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. நாணயத்தின் நடுவில் 'பாரத்' என்ற வார்த்தை தேவநாகரி எழுத்திலும், 'இந்தியா' என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு உள்ளது. அசோக சின்னத்தின் கீழே, சர்வதேச எண்களில் ரூபாய் சின்னம் மற்றும் மதிப்பு "75" ஆகியவற்றை இடம்பெற்று உள்ளது.
நாணயத்தின் பின்புறம், நாடாளுமன்ற வளாகத்தின் படம் இடம்பெற்று உள்ளது. அதன் மேற்பகுதியில், தேவநாகரி எழுத்தில் 'சன்சாத் சங்குல்' என்றும், நாணயத்தின் கீழ் சுற்றளவில் "PARLIAMENT COMPLEX" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தின் படத்திற்கு கீழே, "2023" ஆண்டு என்று, சர்வதேச எண் வரிசையில் எழுதப்பட்டு உள்ளது.
35 கிராம் எடை கொண்ட இந்த நாணயம், 44 மில்லி மீட்டர் விட்டமும், 200 தொடர்களும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த உலோக நாணயம், 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் தாமிரம், தலா 5 சதவீதம் நிக்கல் மற்றும் துத்தநாகம் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.
புதிய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நாணயத்தை வேறுபடுத்தி காட்டுவதற்காக பின்புறத்தில் கருப்பு நிறம் கொடுத்து உள்ளனர். இந்த நிக்கல், துத்தநாகம் உள்ளிட்ட உலோக கலப்பு காரணமாக ஏற்பட்ட ரசாயன மாற்றத்தால் நாணயத்தில் கருப்பு நிறம் உருவானதாக கூறப்படுகிறது.