எட்டாவா (உத்தரபிரதேசம்):டெல்லி - தர்பங்கா சிறப்பு விரைவு ரயிலில் இன்று (நவ.15) ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது மூன்று பெட்டிகள் எரிந்து இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயிலில் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் எனவும், சிறிது நேரத்தில் தீ விரைவாகப் பல பெட்டிகளுக்குப் பரவ தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் உரிய நேரத்தில் வெளியேறியதால் உயிர்ச் சேதம் ஏற்பட வில்லை எனவும், மேலும், உடனடியாக தீயணைப்புத் துறை வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளனர்.
குந்தன் என்ற பயணி கூறும் போது, "டெல்லி - தர்பங்கா சிறப்பு விரைவு ரயில் பீகாரிலிருந்து முசாபர்பூருக்குச் சென்றதாகவும், சராய் பூபத் ரயில் நிலையம் அருகே ரயில் மெதுவாகச் சென்ற போது ரயிலில் மின்விசிறிகள் மற்றும் விளக்குகள் அணைக்கப்பட்டது. அப்போது திடீர் என மக்கள் கத்துவது போன்ற சத்தம் கேட்டது வெளியில் பார்த்த போது ரயில் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததாகவும் ரயிலில் பயணம் செய்தவர் ரயிலிலிருந்து கூட்டமாக வெளியேறினர்." எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களே காரணம்: இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது, "சரியாக இன்று (நவ.15) மாலை 5 மணியளவில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீ விபத்து நடந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்கு முன்பு பெட்டி S1, S2 மற்றும் S3 பெட்டிகளில் தீ பரவியது." எனத் தெரிவித்துள்ளனர்.
வடக்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO) ஹிமான்ஷு உபாத்யாய் கூறும் போது, "டெல்லி - தர்பங்கா சிறப்பு விரைவு ரயிலில் பெட்டி எண் S1ல் இருந்து புகை வெளி வருவதை எட்டாவா அருகே உள்ள சாராய் போபட் சந்திப்பில் ஸ்டேஷன் மாஸ்டர் கவனித்துள்ளார். உடனடியாக ரயில் மின்சாரம் அணைக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது வரை உயிர்ச் சேதம் குறித்து தகவல் எதுவும் இல்லை. மேலும் தீ பிடித்த பெட்டிகள் ரயிலிலிருந்து பிரிக்கப்பட்டுத் தீயணைப்புத் துறையினரால் தீ அணைக்கும் பணி நடைபெற்றது" எனத் தெரிவித்தார்.
மேலும் ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை வடக்கு ரயில்வே தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி,
- டெல்லி ரயில் நிலையத்திற்கான உதவி எண்: 011-23341074, 011-23342954, 9717631960
- வணிகக் கட்டுப்பாடு டெல்லி பிரிவு உதவி எண்: 9717633779
- வடக்கு ரயில்வே தலைமையகம் வணிகக் கட்டுப்பாடு உதவி எண்: 9717638775
- ஆனந்த் விஹார் டெர்மினல் உதவி எண்: 9717636819
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் பலி!