டெல்லி:நாடாளுமன்றம் மற்றும் சட்ட பேரவையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ள நிலையில் நடப்பு சிறப்பு கூட்டத் தொடரில் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று (செப். 18) பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியது. முதல் நாள் கூட்டம் பழைய கட்டடத்தில் நடைபெற்ற நிலையில் இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மீதமுள்ள 4 நாள் அமர்வுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி பழைய நாடாளுமன்ற வளாத்தில் அனைத்து கட்சி எம்.பிக்களும் ஒன்றிணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மீதமுள்ள நான்கு நாள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று (செப். 18) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதுது. முன்னதாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் விரைவில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யபட உள்ளது.