Nepal plane crash:காத்மண்டு: நேபாளத் தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து 68 பயணிகள் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பயணிகளுடன் எட்டி விமான நிறுவனத்தின் விமானம், நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் புறப்பட்டது.
பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சேதி நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், 2 கொரியா நாட்டினர், அயர்லாந்து மற்றும் அர்ஜென்டினா நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 14 வெளிநாட்டினர் பயணித்தனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விமானத்தில் பற்றி எரியும் தீயை அணைத்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ராணுவம் களமிறக்கப்பட்டு மீட்புப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து தீ பயங்கரமாக வெளியேறியதால், வீரர்களின் மீட்புப் பணி அசாதாரணமாக அமைந்தது.
தொடர் மீட்புப் பணியில் ஏறத்தாழ 67 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும், விமான ஊழியர்கள் உள்பட விமானத்தில் பயணித்த 72 பேரும் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், கடும் புகை மூட்டம் உள்ளிட்ட காரணங்களால் கூட விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மற்றொருபுரம் விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். விமானம் விபத்திக்குள்ளாவதற்கு சில மணித் துளிகளுக்கு முன் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு செல்வது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
விபத்தை தொடர்ந்து பொக்காரா விமான நிலையம் மூடப்பட்டு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்து குறித்து தகவலறிந்ததும் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நேபாள பிரதமர் பிரசன்டா நடத்தினார். தொடர்ந்து விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு நேரடியாக சென்று அவர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி