டெல்லி: இந்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி நடக்கவிருந்த, முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET PG) நுழைவுத் தேர்வை மத்திய அரசு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
அதன்பிறகு, ஏப்ரல் 18ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவியதன் காரணமாக, ஏப்ரல் 18ஆம் தேதியும் தேர்வு நடத்தப்படவில்லை. மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு, செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகளும் வெளிவந்துவிட்டன.
மருத்துவர்களுக்கு பணிச்சுமை
ஆனால், தற்போது வரை முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கை தள்ளிப்போகிறது.
ஈடிவி பாரத்திடம் போராட்டத்தில் காயமடைந்த மருத்துவர்கள் பேட்டி முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறாததால், இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கடும் பணிச்சுமைக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், உடனடியாக முதுகலை மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என நாடு முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி
இந்நிலையில், டெல்லியில் ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வினை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தை நோக்கி நேற்று பேரணி (டிசம்பர் 28) சென்றனர்.
அவர்களை ஐடிஓ பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தி, பலரை சிறைப்பிடித்துள்ளனர். மேலும், போலீசார் நடத்திய தடியடி தாக்குதலில் பெண்கள் உள்பட பல மருத்துவர்கள் காயமடைந்தனர். போலீசாரின் தாக்குதலை காணொலி பதிவுசெய்த போராட்டக்காரர்களின் செல்ஃபோன்கள் பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, போராட்டத்தில் காயமடைந்த மருத்துவர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், "கரோனா தொற்று நேரத்தில் எங்களை போர்வீரர்கள் என்றழைத்தனர். ஆனால், தற்போது எங்களை இப்படி நடத்துகிறார்கள்" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஒரு கருப்பு தினம்
காவல்துறை வன்முறை குறித்து பயிற்சி மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FORDA)அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "அனைத்து மருத்துவ நிறுவனங்களும் இன்று முதல் முழுவதுமாக மூடப்படுகிறது. இந்த போலீசாரின் கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், எங்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், பயிற்சி மருத்துவர்களை விடுவிக்க வேண்டும்.
நாட்டின் மருத்துவச் சேவை வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம். கரோனா எதிர்ப்பு வீரர்கள் என்ற போற்றப்பட்ட பயிற்சி மருத்துவர்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டு, அவர்கள் இழுத்துச்செல்லப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் முதுகலை நீட் மருத்துவ கலந்தாய்வு நடத்தக்கோரி அமைதியான முறையில் போராடி வருகின்றனர். இந்த அநீதிக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.
இதனால், போராட்டம் நடத்தும் பயிற்சி மருத்துவர்கள் டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கங்குலிக்கு கரோனா தொற்று; மருத்துவமனையில் அனுமதி