அமிர்தசரஸ் (பஞ்சாப்): பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து தொடர்வார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், கேப்டன் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகிய இருவருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது.
கருத்து மோதல்
இதையடுத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து பிரச்னைக்கு காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், காங்கிரஸ் மேலிடம் நினைத்ததுபோல பிரச்னை அவ்வளவு எளிதில் அவர்களை விட்டு விலகவில்லை.
தொடர்ந்து ஏற்பட்ட கருத்து மோதல்களை அடுத்து, தான் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய முதலமைச்சர்
இதையடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே, திடீரென பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார்.
"பஞ்சாப் மாநில நலனில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது. தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும், தொண்டராக கட்சியில் தொடர்வேன்" என்று அவர் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்தார்.
ராஜினாமா வாபஸ்
இதனால் காங்கிரஸ் கட்சியில் மேலும் பரபரப்பு தொற்றுக்கொண்டது. இவ்வேளையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார்.
இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சி தலைமையின் பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு நவ்ஜோத் சிங் சித்து தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "விரைவில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ளேன். நான் ராஜினாமா செய்தது எனது தனிப்பட்ட நலனுக்கானது கிடையாது. ஒவ்வொரு பஞ்சாப் மக்களின் நலனுக்கானது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தால், குடும்ப நல நீதிமன்றம் துணை நிற்காது!