தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 1, 2023, 10:26 PM IST

ETV Bharat / bharat

நாளை வாக்கு எண்ணிக்கை: வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்?

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை (மார்ச் 2) வெளியாகின்றன. 3 மாநிலங்களிலும் எந்த கட்சி, ஆட்சியை கைப்பற்றப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

3 மாநில தேர்தல் முடிவுகள்
3 மாநில தேர்தல் முடிவுகள்

ஹைதராபாத்:திரிபுரா மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 16ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் கடந்த 27-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்தது. மேகாலயாவில் 60 தொகுதிகள் இருந்தாலும், ஐக்கிய ஜனநாயக கட்சி (UDP) வேட்பாளர் மரணம் அடைந்ததால், 59 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில், ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதால், அங்கும் 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், 3 மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பதிவான வாக்குகள் நாளை (மார்ச் 2) எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. பிற்பகலுக்குள் எந்த கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திரிபுரா: திரிபுரா மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த மாணிக் சாஹா முதலமைச்சராக உள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக - திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதேபோல், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கூட்டணி களம் இறங்கியது. மேலும், திப்ரா மோத்தா கட்சியும் போட்டியிட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி, பாஜக-திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி, மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 32 தொகுதிகளை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையை பெற 31 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதுமானது.

மேகாலயா:மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த கான்ரட் சங்மா முதலமைச்சராக உள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அங்கு நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், அங்கு தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நாகாலாந்து:நாகாலாந்து மாநிலத்தில் முதலமைச்சராக இருப்பவர், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியை (என்டிபிபி) சேர்ந்த நெய்பியூ ரியோ. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக - என்டிபிபி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. கருத்துக் கணிப்புகளின்படி, இந்த முறை பாஜக - என்டிபிபி கூட்டணி மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 42 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) வெறும் 6 இடங்களையே கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பிஆர்எஸ்..!

ABOUT THE AUTHOR

...view details