சென்னை:தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். வி தி வுமன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பூ, தன் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது, "ஒரு குழந்தை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டால், அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும். ஆணா, பெண்ணா என்பதில் பிரச்சினை இல்லை. என் அம்மாவுக்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கையே இருந்தது. மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் தான் தனது பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்தார். எனக்கு 8 வயதாகும் போது பாலியல் துன்புறுத்தல்களை செய்யத் தொடங்கினார்.
எனக்கு 15 வயதாகும் போது அவருக்கு எதிராகத் துணிச்சலாக பேசத் தொடங்கினேன். எனக்கான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் எனக்கு வந்தது. எங்கு நான் ஏதாவது சொன்னால் எனது குடும்ப உறுப்பினர்கள் துன்புறுத்தப்படுவார்களோ என்ற பயம் எனக்கு இருந்தது. இதன் காரணமாகவே பல ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன்.
நான் இதைச் சொன்னால் எனது அம்மாவே என்னை நம்ப மாட்டாரோ என்ற அச்சமும் எனக்கு இருந்தது. ஏனென்றால் அவரை பொறுத்தவரை என்ன நடந்தாலும் கணவர் தான் தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே இருந்தார். எனக்கு 15 வயதாகும் போது இனியும் தாங்க முடியாது என்று முடிவு செய்தேன்.
அவருக்கு எதிராகப் பேச ஆரம்பித்தேன். எனக்கு அப்போது 16 வயது கூட ஆகியிருக்காது. அவர் எங்களை விட்டுச் சென்றார். அப்போது எங்களிடம் எதுவுமே இல்லை. அடுத்த வேலை உணவுக்கே நாங்கள் என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலையிலேயே இருந்தேன். குழந்தைப் பருவம் எனக்கு மிக மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது.