புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு செல்லும் என மூன்று நீதிபதிகளும், மாறுபட்ட தீர்ப்பை தலைமை நீதிபதி உட்பட இருவரும் வழங்கியுள்ளனர். இத்தீர்ப்பில் அகில இந்திய காங்கிரஸ் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் சமூக நீதியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக புதுச்சேரி மாநிலத்தில் நாங்கள் அத்தீர்ப்பை எதிர்க்கிறோம். பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன.
9 நீதிபதிகள் அமர்வில் இடஒதுக்கீடு சமூகத்தின் அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் தரவேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளனர். வருமானத்தை மட்டும் கணக்கில் எடுக்கக்கூடாது என இந்திய அரசியலமைப்பு அமர்வு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
மேல் சாதியினரின் வருமான வரம்பு வருடம் ரூ.8 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.2.25 லட்சமும், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ.3 லட்சமும் என வித்தியாசம் உள்ளதால் எதிர்க்கிறோம். ஐந்து சதவீதம் உள்ள மேல் சாதியினருக்கு பத்து சதவீதம் இடஒதுக்கீடும், 95 சதவீதம் இதர சமுதாயத்தினருக்கு 90 சதவீதம் இடஒதுக்கீடாகிறது.
ரூ.8 லட்சம் வருமான உள்ள மேல் சாதியினர் அவர்களின் ஐந்து சதவீதத்தில் 2 சதவீதம் தான். இது சமூகநீதிக்கு ஏற்றதல்ல. சமூகநீதியை காக்கவே முழுமையாக புதுச்சேரி மாநிலத்தில் இதை எதிர்க்கிறோம். எங்கள் மாநிலத்துக்கு இது பொருந்தாது என்பதை கட்சித் தலைமையிடம் சொல்லிதான் எதிர்க்கிறோம்.