லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முரத்நகர் பகுதியில் உள்ள தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
புதிதாக கட்டப்பட்ட இந்த மேற்கூரை 15 தினங்களுக்கு முன்பு மக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்ட நிலையில், அதன் தரத்தினை பரிசோதித்து அனுமதி வழங்கிய அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முரத்நகர் மாநகராட்சி கவுன்சில் தலைவர் விகாஸ் டியோடியா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விகாஸ், "இது போன்ற விபத்தை நான் இதுவரை கேட்டதுமில்லை, கண்டதுமில்லை. குடும்பத்தினரை இழந்து வாடும் உறவினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கூரையினை தரமற்ற வகையில் கட்டியவர்கள் மீதும், அதனை பரிசோதித்து அனுமதி வழங்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.