மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (ஜூன் 4) துபாயில் இருந்து வந்த விமானத்தில் சிலர் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது இரண்டு பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அவர்களின் உடைமைகளை சோதனை செய்த போது பெண்கள் பயன்படுத்தும் 56 மணி பர்ஸ்கள் இருந்தன. இதனையடுத்து பயணிகளிடம் அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
பின்னர் அதிகாரிகள் மணி பர்ஸ்களை ஆய்வு செய்த போது சுமார் 2 கிலோ தங்கம் மற்றும் 2005 கிராம் எடை கொண்ட வெள்ளி கம்பிகளை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணிகள் இருவரையும் கைது செய்தனர். இருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.1.24 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துபாயில் அந்த நகைகளை யாரிடம் வாங்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மற்றொரு சம்பவமாக, ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த விமானத்திலும் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். விமானத்தில் இருந்து வந்த பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் பயணிகள் இருவர் 8 தங்க கட்டிகளை இடுப்பில் கட்டி வைத்திருந்த துணிக்குள் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், கடத்தி வரப்பட்ட தங்கத்தின் எடை 8 கிலோ என்றும், அதன் சர்வதேச மதிப்பு ரூ.4.94 கோடி என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 27ம் தேதி, மும்பை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10.16 கோடி மதிப்புள்ள 16 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இந்திய பெண் மற்றும் சூடானை சேர்ந்த 18 பெண்களை கைது செய்தனர்.
இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உள்ளது. ஆனால் நடப்பாண்டு பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைக்கப்படவில்லை. இதன் காரணமாகவே வெளிநாடுளில் இருந்து தங்கம் அதிகளவில் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், தங்கம் கடத்தி வருவோர் சுங்கத்துறையினரின் அதிரடி சோதனையில் சிக்கி விடுகின்றனர்.
இதையும் படிங்க: சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில் திடீர் கட்டண உயர்வு:காரணம் இதுதான்!