ஆந்திரப் பிரதேசம்: இந்தியாவின் மாபெரும் தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி, இன்று(செப்.16) திருமலை - திருப்பதிக்கு வருகை தந்தார். அங்குள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி ஸ்ரீவாரி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரின் இளைய மகனான அனந்த் அம்பானியின் வருங்கால மனைவியான ராதிகா மெர்ச்சன்ட் உடன் வந்திருந்தார்.
மேலும், சாமி தரிசனம் செய்த அம்பானி கோயிலுக்கு காணிக்கையாக 1.50 கோடி ரூபாய் தொகையைக் கோயில் நிர்வாகத்திற்கு வழங்கினார். சாமி தரிசனத்திற்குப்பிறகு ரங்கநாயக மண்டபத்தில் புரோகிதர்களால் வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. அதுமட்டுமின்றி, திருமலை - திருப்பதியின் சிறப்பு தரிசனமான சாமியின் நிஜபாத தரிசனமும் அம்பானிக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், 'திருமலை - திருப்பதிக்கு வந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் திருமலை கோயில் வளர்ச்சியடைந்துகொண்டே போகிறது. ஏழுமலையானிடம் அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென தான் வேண்டிக்கொண்டேன்' எனவும் தெரிவித்துக்கொண்டார்.