டெல்லி:நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குறைந்தது ஏழு எம்பிக்களை கொண்ட கட்சிகளுக்கு அலுவலகம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டிலேயே திமுகவுக்கு இடம் ஒதுக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு தான் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. சில வாரங்களுக்கு முன்னர் இதன் அனைத்து கட்டுமான பணிகளும் நிறைவடைந்தன.
நவீன வசதிகளுடன் 3 மாடி கட்டடம்: டெல்லியில் அமைந்துள்ள திமுக அலுவலகமான, அண்ணா - கலைஞர் அறிவாலயம் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. தரை தளத்தில் கட்சி கூட்டங்களை நடத்துவதற்காகப் பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்திலும், 2ஆம் தளத்திலும் நவீன வசதிகளுடன் கூடிய கருத்தரங்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து 3ஆவது தளத்தில் எம்.பி.க்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.
இது மட்டுமின்றி நூலகம், செய்தியாளர்களுக்குத் தனி அறைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஏப். 2) மாலை 5 மணியளவில் திறந்துவைத்தார். முன்னதாக, திமுக அலுவலக வளாகத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளும் திறந்துவைக்கப்பட்டன. அண்ணா சிலையை திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனும், கருணாநிதி சிலையே திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு திறந்து வைத்தார்.