தமிழ்நாடு

tamil nadu

"தி கேரளா ஸ்டோரி" படத்திற்கு வரி விலக்கு - அறிவித்தது யார் தெரியுமா?

By

Published : May 6, 2023, 3:53 PM IST

மத்திய பிரதேச மாநிலத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.

The Kerala Story
The Kerala Story

ஐதராபாத் : பயங்கர எதிர்ப்புக்கு மத்தியில் வெளியாகி உள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்து மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்து உள்ளார்.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. படம் வெளியாவதற்கு முன் பயங்கர எதிர்ப்புகளை சந்தித்தது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் நர்சிங் கல்லூரியின் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளை ஒரு இஸ்லாமிய பெண் மூளைச் சலவை செய்து இஸ்லாமிய மதத்திற்கு மனமாற்றி தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் குழுப்பில் இணைப்பது போன்று கதையாக்கப்பட்டு உள்ளது.

இந்த திரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். படத்தின் முன்னோட்டம் வெளியானது முதலே நாடு முழுவதும் படத்திற்கான எதிர்ப்பு தீவிரமாக கிளம்பியது. படத்தை தடை செய்யக் கூறி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கேரளாவை கதைக் களமாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படத்தை அந்த மாநிலத்திலேயே தடை செய்ய கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் படம் வெளியான நிலையில், திரையரங்குகள் முன் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது ஒரு புறம் இருக்க வடமாநிலங்களில் இந்த படத்திற்கு ஆதரவு குரல்கள் ஒலித்து வருகின்றன. கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி அழகு, உழைப்பு, திறமை, அறிவு உள்ளிட்ட பண்புகளை கொண்ட கேரளா மக்கள் சமூகத்தில் நிலவும் பயங்கரவாதத்தின் பாதிப்புகளை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளிப்படுத்தி உள்ளதாகவும், நாட்டு எதிரான சதித்திட்டத்தை இந்த திரைப்படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு உள்ள மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தீவிரவாதத்தின் கொடூரமான உண்மைத் தன்மையை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளிக்காட்டி உள்ளதாகவும் அதனால் இந்த படத்திற்கு வரி விலக்கு தேவை என்றும் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக இந்த படத்திற்கு வரி விலக்கு வழங்கக் கோரி, மத்திய பிரதேச அமைச்சர் ராகுல் கோதாரி, முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். தொடர்ந்து மாநில பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கக் கோரி தொடர் கோரிக்கை விடுத்ததை அடுத்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வரி விலக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :sharad pawar: சரத் பவார் ராஜினாமாவை வாபஸ் பெற்றார்!

ABOUT THE AUTHOR

...view details