நரேந்திரபூர்:மேற்கு வங்க மாநிலம் நரேந்திரபூரில் பிறந்த குழந்தையை பணத்திற்காக விற்றதாக கூறப்படும் குழந்தையின் தாய், உள்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் நரேந்திரபூரில் உள்ள ஒரு பெண்ணின் கணவர் நீண்ட நாட்களுக்கு முன் இறந்து விட்டார். அதன் பிறகு வேறொரு ஆணுடன் திருமணத்தை மீறிய தொடர்பு கொண்டதால் இந்தப் பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.
கணவரை இழந்த பெண் கர்ப்பம் தரித்துள்ளதை அறிந்த அக்கம் பக்கத்தினர், இந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண், தனக்கு பிறந்த குழந்தையை அழிக்க முடிவு செய்து உள்ளார். இந்த விஷயம் குறித்து அறிந்த தபஸ் மோண்டல் மற்றும் சாந்தி மோண்டல் என்ற தம்பதியர், பஞ்சாயர் பகுதியில் வசிக்கும் குழந்தை பேறு இல்லாத ஜூமா மாஜியை அழைத்து இந்தப் பெண்ணின் குழந்தையை தத்தெடுக்கும்படி கூறி உள்ளனர்.
இதனை அடுத்து குழந்தையை தத்தெடுப்பதற்கு ஒப்புக்கொண்ட ஜூமா மாஜி, பிறந்து 11 நாட்களே ஆன கைக்குழந்தையை 2 லட்சம் ரூபாய் கொடுத்து தத்தெடுத்துக் கொண்டனர். மேலும் அந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை ஏற்பாடு செய்வதற்காக ஜூமா மாஜி தனது நிலத்தை விற்றதாகக் கூறப்படுகிறது. பிறந்த குழந்தையை 2 லட்சம் ரூபாய் பணத்திற்கு விற்றதாக போலீசாருக்கு உள்ளூர்வாசி ஒருவர் தகவல் அளித்து உள்ளார்.