நைஜீரியா: நைஜீரியாவில் நைஜர் மாகாணத்தில், எக்போட்டி நகரில் கடந்த 11ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக படேகி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சென்றிருந்தனர். திருமண விழா முடிந்து நள்ளிரவில் படகில் தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். சுமார் 250 பேர் ஒரே படகில் பயணம் செய்தனர். சிலர் படகில் தங்களது இருசக்கரவாகனங்களையும் எடுத்து வந்ததாக தெரிகிறது. அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த படகு நைஜர் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
12ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்தது. இதில், சிறார்கள் உள்பட 108 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி மாயமாகினர். மாயமானவர்களை மீட்கும் பணிகள் நேற்று(ஜூன் 15) நிறைவடைந்தது. அதன்படி, விபத்தில் சிக்கிய 144 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் உள்ளூர் பழக்க வழக்கங்களின்படி ஆற்றின் அருகே புதைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், படகு மரக்கட்டையில் மோதி இரண்டாக உடைந்து ஆற்றில் மூழ்கியதாக, இந்த விபத்திலிருந்து உயிர்தப்பியவர்கள் கூறியுள்ளனர். அதேபோல், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் தெரிவித்தனர்.
இந்த படகு விபத்தில் உயிர் பிழைத்த இப்ராஹிம் முகமது பேசுகையில், "நாங்கள் சில குழந்தைகளை மீட்டு கரைக்கு கொண்டு சேர்த்தோம். ஆனால், சில பெண்கள் தங்கள் குழந்தைகளை தரவில்லை. அதனால் பல குழந்தைகள் நீரில் மூழ்கிவிட்டனர். அந்த படகில் பயணித்த பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளை உடன் அழைத்து வந்திருந்தனர். அதேபோல், இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள்தான். நான் மூன்று குழந்தைகளை மீட்டேன்" என்று கூறினார்.
இது குறித்து படேகி மாவட்ட ஆட்சியர் கூறும்போது, "200 பேர் மட்டுமே பயணிக்க வேண்டிய படகில், சுமார் 250 பேர் பயணித்துள்ளனர். உடனடியாக மீட்புப் பணி தொடங்கப்பட்டது. அருகில் இருந்த ஏராளமான கிராம மக்கள் உதவிக்கு வந்தனர். ஆனால், நதி மிகவும் பெரியது என்பதால் மீட்புப் பணி மிகவும் கடினமாக இருந்தது. இறந்தவர்களில் 68 பேர் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். படேகி உள்ளிட்ட தண்ணீரால் சூழப்பட்ட பல மாவட்டங்களில் மக்கள் படகு போக்குவரத்தைதான் பயன்படுத்துகின்றனர். அதனால், படகு விபத்துகள் அடிக்கடி நடக்கும். பொதுவாக அதிக பாரம் ஏற்றுதல், பராமரிப்பில்லாத பழைய படகுகள் போன்றவற்றால் விபத்துகள் நடக்கின்றன. கடந்த மே மாதம் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்" என்றார்.
இந்த படகு விபத்து கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்று என அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோல், அப்பகுதிகளில் சாலைகளை மேம்படுத்தி, போக்குவரத்தை எளிதாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Cyclone Biparjoy Impacts: குஜராத்தை புரட்டிப்போட்ட பிப்பர்ஜாய் புயல் - 22 பேர் காயம், 940 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு!