தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"இந்தியாவில் மூன்று ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயம்" - அதிர்ச்சி அளிக்கும் அரசின் தரவுகள்! - குற்றவியல் சட்டம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 2019 முதல் 2021 வரையிலான காலத்தில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 180 பெண்களும், 38 ஆயிரத்து 234 சிறுமிகளும் காணாமல் போயுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இந்த காலகட்டத்தில் 13 லட்சம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி அளிக்கும் அரசின் தரவுகள்!
இந்தியாவில் இந்த காலகட்டத்தில் 13 லட்சம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி அளிக்கும் அரசின் தரவுகள்!

By

Published : Jul 30, 2023, 7:32 PM IST

டெல்லி: 2019 மற்றும் 2021க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் நாட்டில் 13 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமான சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போய் உள்ளதாக, அதிர்ச்சித் தகவலை, மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் (NCRB) தொகுக்கப்பட்டு உள்ள இந்த தரவுகளின் அடிப்படையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 2019 மற்றும் 2021க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 61 ஆயிரத்து 648 பெண்களும், அதற்கும் குறைவான வயதுடைய 2 லட்சத்து 51 ஆயிரத்து 430 சிறுமிகளும் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் (NCRB) இந்த தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. 2019 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 180 பெண்களும், 38 ஆயிரத்து 234 சிறுமிகளும் காணாமல் போய் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதே காலகட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 1 லட்சத்து 56 ஆயிரத்து 905 பெண்களும் 36 ஆயிரத்து 606 சிறுமிகளும் காணாமல் போய் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 400 பெண்களும், 13 ஆயிரத்து 33 சிறுமிகளும் இந்த காலகட்டத்தில் காணாமல் போனதாக பட்டியல் நீண்டு உள்ளது.

ஒடிசா மாநிலத்தில், மூன்று ஆண்டுகளில் மட்டும் 70 ஆயிரத்து 222 பெண்களும் 16 ஆயிரத்து 649 சிறுமிகளும் காணாமல் போய் உள்ளதாக அறிக்கையில் கூறப்படுகிறது. யூனியன் பிரதேசங்களில், காணாமல் போன பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கையில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.

தேசிய தலைநகரில், 2019 மற்றும் 2021க்கு இடைப்பட்ட காலத்தில் 61 ஆயிரத்து 054 பெண்களும் 22 ஆயிரத்து 919 சிறுமிகளும் காணாமல் போய் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் 8 ஆயிரத்து 617 பெண்களும் ஆயிரத்து 148 சிறுமிகளும் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெண்களின் பாதுகாப்பிற்காக, நாடு முழுவதும் பல முன்முயற்சிகளை எடுத்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இதில் பாலியல் குற்றங்களை திறம்பட தடுப்பதற்காக குற்றவியல் சட்டம் திருத்தச் சட்டம், 2013 இயற்றப்பட்டது. மேலும், குற்றவியல் திருத்தச் சட்டம், 2018, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை உள்பட இன்னும் கடுமையான தண்டனை விதிகளை பரிந்துரைப்பதற்காக இயற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்குகளின் விசாரணையை 2 மாதங்களில் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மேலும் இரண்டு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இதுதொடர்பாக, அரசு அவசரகால பதிலளிப்பு ஆதரவு அமைப்பைத் தொடங்கி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இது அனைத்து அவசர நிலைகளுக்கும் ஒரே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எண் (112) அடிப்படையிலான அமைப்பை வழங்குகிறது, காவல் மற்றும் பாதுகாப்பு மேலாண்மைக்கு ஸ்மார்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முதல் கட்டமாக அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகிய எட்டு நகரங்களில் பாதுகாப்பான நகரத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன.

குடிமக்கள் ஆபாசமான உள்ளடக்கங்கள் குறித்து புகாரளிப்பதற்கான சைபர் கிரைம் அறிக்கையிடல் போர்ட்டலை உள்துறை அமைச்சகம் செப்டம்பர் 20, 2018 அன்று அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள பாலியல் குற்றவாளிகளை சட்ட அமலாக்க முகமைகளால் விசாரிக்கவும், கண்காணிக்கவும் வசதியாக, செப்டம்பர் 20, 2018 அன்று உள்துறை அமைச்சகம் பாலியல் குற்றவாளிகள் குறித்த தேசிய தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சில்லறையில் சிகரெட் விற்பனை குற்றமா? - சட்டவிதிகள் குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details