மோர்பி (குஜராத்): மோர்பியில் உள்ள புகழ்பெற்ற கேபிள் பாலம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. விடுமுறை என்பதால் நாட்களில் இந்த ஜூல்டா பாலத்திற்கு ஏராளமானோர் வந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் பாலம் திடீரென்று உடைந்து ஆற்றில் விழுந்தது.
இதனால் பாலத்தில் இருந்த 400க்கும் மேற்பட்ட மக்கள் ஆற்றில் விழுந்தனர். 100க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் துரிதமாக மீட்புப் பணி தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த விபத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது.
வரலாற்றுச்சிறப்புமிக்க மோர்பி ஜூல்டா பாலம் ஓரேவா குழுமத்தால் 2 கோடி செலவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் பாலத்தை அடைந்தனர். மாலை நேரத்தில் பாலம் இடிந்து விழுந்து நூற்றுக்கணக்கான மக்கள் கீழே பாயும் மச்சுவா நதியில் மூழ்கினர். அதன்பேரில் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
மோர்பி விபத்து குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். மீட்புப் பணிகளுக்காக உடனடியாக குழுக்களை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். நிலைமையை உன்னிப்பாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'மோர்பியில் நடந்த விபத்தால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். இதுகுறித்து குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி மற்றும் பல அலுவலர்களிடம் பேசியுள்ளேன். உள்ளாட்சி நிர்வாகம், நிவாரணப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. தேசிய மீட்புப்படையினர் விரைவில் அந்த இடத்தை அடைவர். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.