Google layoff: நியூயார்க்: 2023ஆம் ஆண்டு உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், பெரு நிறுவனங்கள் முதல் தொடக்க நிலை நிறுவனங்கள் வரை ஆட்குறைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஏற்கெனவே ஃபேஸ்புக், அமேசான், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பொருளாதார மந்தநிலை அச்சத்தால் ஆயிரக்கணக்கிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டன. அண்மையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது.
இந்த வரிசையில், தற்போது கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பெபட், சுமார் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் குறைப்புக்கு முழு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக ஆல்பெபட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அதன்படி, உலகம் முழுவதும் உள்ள கூகுள் நிறுவனங்களில் பணிபுரியும் 12ஆயிரம் ஊழியர்கள் அல்லது ஒட்டுமொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதம் வரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கூகுள் அலுவலகத்தில் முதற்கட்ட ஊழியர்கள் பணிநீக்கம் உடனடியாக நடைபெறும் என்றும்; படிப்படியாக மற்ற நாடுகளில் உள்ள கூகுள் அலுவலகங்களில் பணி நீக்கம் பணி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது, "பணி நீக்கத்தில் இடம்பெற்றுள்ள தொழில் நுட்ப ஊழியர்கள் அடுத்த வேலைவாய்ப்பைத் தேடும் வரையில் அவர்களுக்குப் போதுமான ஆதரவு அளிக்கும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்படும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களது 60 நாள் நோட்டீஸ் காலத்திற்கான முழு சம்பளமும் வழங்கப்படும் என்றும்; கூடுதலாக 16 வாரங்களுக்கான சம்பளத் தொகையும் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவைத் தவிர்த்து பிற நாடுகளில் பணி நீக்கத்தை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பணியில் தொடரும் ஆயிரக்கணக்கிலான ஊழியர்களின் வருடாந்திர போனஸ் தொகையில் கூகுள் நிறுவனம் கை வைத்துள்ளது.
இதையும் படிங்க:PFI : பா.ஜ.க நிர்வாகி கொலை வழக்கில் துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்... என்.ஐ.ஏ அறிவிப்பு!